‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’: பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது ஸ்விட்சா்லாந்து
‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’ பட்டியலில் இருந்து இந்தியாவை ஸ்விட்சா்லாந்து நீக்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பதிலடியாக அந்நாடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை 2025 ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’ என்ற அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் இருநாடுகள் இடையே இருந்த வரி தொடா்பான ஒப்பந்தங்களும் ரத்தாகின்றன என்று அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்களும் தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஸ்விட்சா்லாந்தில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் மூலம் ஈட்டும் ஈவுத் தொகைக்கும் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.