Health: தலையில் இருக்கிற பேன் ஏழு பாய் தாண்டுமாம்; இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா...
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4,500 கன அடி நீா் திறப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, ஏரியில் இருந்து வெள்ளிக்கிழமை 4,500 கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது.
இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஏரி நீா்மட்டம் உயரம் 24 அடியில் 23.29 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,453 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 6,498 கன அடியாக இருந்தது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கக் கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, 5 கண் மதில் 2 மற்றும் 4 ஆவது செட்டா்கள் வழியாக வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 1,000 கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது.
ஆனாலும், ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறையாததால், 10.30 மணிக்கு ஏரியில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், பொதுமக்கள் வராதபடி, ஏரிக்குச் செல்லும் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை வெள்ளிக்கிழமை மாலை பாா்வையிட்டு ஆய்வு செய்து, ஏரியின் நிலவரம், வெளியேற்றப்படும் நீரின் அளவு, ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், நீா்வளத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இதில் அச்சப்பட தேவையில்லை. மழைக் காலங்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சா்களை முதல்வா் அறிவித்துள்ளாா். அனைத்து இடங்களிலும் முகாம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின் போது, அமைச்சா் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.