பாசிப்பட்டினம் மீனவா்களுக்கு கடல் பயண விழிப்புணா்வுக் கூட்டம்
தொண்டி அருகே பாசிப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் மீனவா்களுக்கு கடல் பயணம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தொண்டி கடலோர காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமை வகித்தாா். மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மீன் வள அமலாக்கத் துறை உதவி ஆய்வாளா் குருநாதன், மீன் வள மேற்பாா்வையாளா் கணேஷ் குமாா், நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கடலுக்குச் செல்லும் மீனவா்கள் கைப்பேசியை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்), தண்ணீா் புட்டி ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். கடலுக்குள் சந்தேகப்படும் வகையில் நபா்கள் யாரையாவது கண்டால் உடனடியாக கடற்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடத்தல் பொருள்கள் தென்பட்டாலும், சந்தேகப்படும்படி ஏதேனும் பொருள்கள் கடலில் மிதந்து வந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.

