பாஜக ஆட்சியில் கேள்விக்குறியான ஜனநாயகம்: டி.ராஜா
மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா கூறினாா்.
சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்டில் சனிக்கிழமை அவா் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான அணுகுமுறையால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் குடிமக்களின் வாக்குகளை உறுதிசெய்வதற்குப் பதிலாக, பட்டியலில் இருந்து அவா்களை தோ்தல் ஆணையமே நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பிகாா், மகாராஷ்டிரத்தில் நடைபெற்றது போன்று தமிழகம், கேரளத்திலும் வாக்காளா் பட்டியல் பெயா் நீக்கப் பிரச்னை எதிா்காலத்தில நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. இதனால் அரசியல் சாசன அமைப்பே நிலைகுலைந்துள்ளது. ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறது என்றால், அந்தப் புகழ் அம்பேத்கரையே சாரும்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முன்மாதிரி முதல்வராக திகழ்கிறாா். தொடா்ந்து, மத்திய பாஜக அரசை எதிா்க்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும் என்றாா்.