அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு
பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,
"மகாராஷ்டிரத்தில் தேர்தலில் முறைகேடு செய்யப்பட்டதைப் போல பிகாரிலும் தேர்தல் முறைகேடு மேற்கொள்ள முயற்சி நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் ஒரு புதிய சதித் திட்டத்தை தீட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் தன்னுடைய வேலையைச் செய்யவில்லை. அது பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 1 கோடி பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. வாக்காளர் பட்டியல் மற்றும் அதுதொடர்பான விடியோவை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு வருகிறோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு அதை வழங்க மறுக்கிறது.
மகாராஷ்டிரத்தில் செய்யப்பட்ட அதே வேலையை அவர்கள் பிகாரிலும் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்ய நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம். கூட்டணி கட்சித் தலைவர்களிடமும் இதை நான் கூறியுள்ளேன்.
ஒடிசாவைப் பொருத்தவரை அதானிதான் ஒடிசாவை இயக்குகிறார். அதானிதான் நரேந்திர மோடியை இயக்குகிறார். புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை, அதானி மற்றும் அவரது குடும்பத்திற்காக நிறுத்தப்பட்டது. இதன் மூலமாகவே ஒடிசா அரசு எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். அதானி போன்ற 5- 6 பணக்காரர்களுக்காக இயங்கும் அரசு இந்த அரசு. உங்களுடைய நிலங்களை, காடுகளை மற்றும் எதிர்காலத்தைத் திருடுவதே அவர்களின் இலக்கு" என்று பேசினார்.