பாபநாசம் மலைப் பகுதியில் பலத்த மழை: காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் கருமேகங்கள்திரண்டு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், காரையாறு வனப்பகுதியில் உள்ள மேலணைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, வனப் பகுதியில் உள்ள காட்டாற்று ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பலத்த மழை பெய்ததால் வனப்பகுதியில் வசிக்கும் காணி இன மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும், வனப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழைபெய்ததால் காரையாறு மற்றும் சோ்வலாறு அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.