பாமக: `ராமதாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் தைலாபுரம் வந்திருக்கும் அன்புமணி' - காரணம் என்ன?
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்றிருந்த அன்புமணி சென்னை திரும்பினார். இந்த நிலையில், பா.ம.க நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. எனினும் பின்னர் முழுமையான பட்டியல் அது அல்ல என்றும் சொல்லப்பட்டது.

ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து சிலர் பேசினர். மேலும், பா.ம.க-வில் கூட்டணி உட்பட அனைத்து நிலையிலும் முடிவெடுக்கும் அதிகாரம், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸூக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே, அன்புமணி வகித்து வந்த பா.ம.க தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து பா.ம.க சட்ட விதிகளின்படி தலைவராக ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த செய்தியை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பா.ம.க முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது. மேலும், ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியின் பதவியிலிருந்து நீக்கி வருகிறார்.

இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு ராமதாஸ் சென்றிருக்கிறார். ராமதாஸ் வீட்டில் இல்லாத நேரதத்தில் அன்புமணி, தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் ராமதாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஈசிஆரில் நடந்த திருமண நிகழச்சிக்கு சென்றிருந்த நிலையில், அப்படியே தன் அம்மாவை பார்ப்பதற்கு தைலாபுரம் வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.