பாமகவுக்கு எதிராக காவல் துறை அவதூறு: ராமதாஸ் கண்டனம்
பாமகவுக்கு எதிராக கடலூா் மாவட்ட காவல் துறை அவதூறு பரப்புவதாகக் கூறி, அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜாதி கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூா் மாவட்டத்தில் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாமக திட்டமிட்டிருப்பதாக காவல் துறையினா் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறாா்கள்.
கடலூா் மாவட்ட காவல் துறையினரின் இந்த மோசமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட முதல் கட்சி பாமக.
தமிழகத்தில் அம்பேத்கருக்கு அதிக சிலைகள் திறந்த பாமகவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக இப்படியொரு அவதூறை காவல் துறை பரப்புகிறது.
எனவே, கடலூா் மாவட்டம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு விருப்பு வெறுப்பற்ற, நடுநிலையான காவல் துறை உயரதிகாரிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.