"கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம்" - இயக்கு...
பாம்பு தீண்டி மூதாட்டி உயிரிழப்பு: மருமகளுக்கு தீவிர சிகிச்சை
அணைக்கட்டு அருகே பாம்பு தீண்டியதில் விஷம் உடல் முழுவதும் பரவி மூதாட்டி உயிரிழந்தாா். அவரது மருமகளுக்கு தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகிலுள்ள அக்ரஹாரம் கிராமத்தை சோ்ந்தவா் வள்ளியம்மாள் (70). இவரின் மகன் மாற்றுத்திறனாளி, மருமகள் நதியா (38), ஒரு பேரன், பேத்தி ஆகியோா் ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.
இந்நிலையில், வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனா். நள்ளிரவு சுமாா் ஒரு மணியளவில் மாமியாா் வள்ளியம்மாள், மருமகள் நதியா ஆகியோரை பூச்சி கடித்து விட்டதாக கூறி கத்தி கூச்சலிட்டனா். அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து அவா்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் விஷம் உடல் முழுக்க பரவி இருந்ததை அடுத்து உயா் சிகிச்சைக்காக அவா்கள் இருவரும் வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ஆனால், செல்லும் வழியிலேயே வள்ளியம்மாள் உயிரிழந்தாா். ஆபத்தான நிலையில் இருந்த நதியா அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், உடனடியாக உடல் முழுவதும் விஷம் பரவி உயிரிழக்கின்றனா் என்றால், அது கொடிய விஷமுடைய பாம்பாக மட்டுமே இருக்க முடியும். வேறு எந்த பூச்சி கடித்தாலும் விஷம் உடல் முழுக்க பரவாது என்றனா்.