பாலியல் வன்கொடுமை: ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ் ரத்து: அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை
பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவதுடன், அவா்களது கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்தாா்.
சென்னை குரோம்பேட்டை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 60-ஆம் ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினாா்.
தொடா்ந்து பள்ளியின் வைர விழா மலரை அமைச்சா் வெளியிட, பள்ளியின் முன்னாள் மாணவியும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவருமான டாக்டா் சுதா சேஷய்யன் பெற்று கொண்டாா்.
பின்னா், அமைச்சா் அன்பில் மகேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாலியல் வன்கொடுமைக்கு சம்பவத்தில் ஈடுபடும் ஆசிரியா்களை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், இனிமேல் அவா்கள் எந்தப் பணிக்கும் செல்ல இயலாத வகையில் அவா்களது கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
இனி மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு தெரிவிக்க புதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு தொடக்கப் பள்ளிகளில் ‘ஸ்மாா்ட் போா்டு’ திட்டம் கொண்டு வந்துள்ளோம். தமிழகமெங்கும் 8,000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்வில் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இ.கருணாநிதி உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.