`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.
நடிப்பில் ஆர்வம்கொண்ட ஆருஷி சொந்தமாக ஹிம்ஸ்ரீ பிலிம் என்ற திரைப்பட தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார். இவரிடம் மும்பையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மான்சி வருண் மற்றும் வருண் பிரமோத் குமார் ஆகியோர் தாங்கள் மினி பிலிம்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டனர். இருவரும் ஆன்கோன் கி குஸ்டாகியன் என்ற பெயரில் படம் தயாரிக்க இருப்பதாக ஆருஷியிடம் தெரிவித்தனர். அதோடு இப்படத்தில் நடிக்க ஆருஷிக்கு வாய்ப்பு கொடுப்பதாகத் தெரிவித்தனர். மேலும் படத்தை தயாரிக்க ரூ.5 கோடி பணம் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கொடுப்பதாகத் தெரிவித்தனர். படத்தில் நடிக்கக் கொடுக்கும் கதாபாத்திரம் பிடிக்கவில்லையெனில் பணத்திற்கு 15 சதவிகிதம் வட்டி கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/4crpyt1b/newindianexpress2025-02-08vvzsmwbeWhatsApp-Image-2025-02-08-at-10.50.59-PM.avif)
அவர்களின் பேச்சை நம்பி அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ஆருஷி கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு தவணையாக மொத்தம் 4 கோடி ரூபாயைக் கொடுத்தார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட பிறகு ஆருஷியிடம் கேட்காமல் படப்பிடிப்பை நடித்தி முடித்தனர். ஆருஷி நடிக்க முடிவு செய்திருந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்தனர். அதோடு அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ஆருஷியின் படத்தை நீக்கிவிட்டனர். இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுக்கும்படி ஆருஷி கேட்டார். ஆனால் தயாரிப்பாளர்கள் இரண்டு பேரும் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதோடு ஆருஷிக்கு எதிராகவும், அவரின் தந்தைக்கு எதிராகவும் வழக்கு தொடருவோம் என்று மிரட்டினர். இதையடுத்து வேறு வழியில்லாமல் ஆருஷி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் கைது செய்யப்படவில்லை.