முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்
ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் - நடந்தது என்ன?
தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் மணியரசன் அடிக்கடி கறிக்கு பணம் வாங்காமல் இருந்துள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/bqbgagpy/WhatsApp_Image_2025_02_09_at_13_28_35_cff68df5.jpg)
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலையில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிமாக மணியரசன் கடைக்கு இறைச்சி வாங்க வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்காக மணியரசன் இறைச்சியை வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார் மணியரசனிடம் இலவசமாகக் கறி கேட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் மணியரசன் கறி கொடுப்பதற்கு மறுத்துள்ளார். இதனால் குமார் மணியரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார் சிறிது நேரம் கழித்து எழும்புக்கூடாக இருக்கும் சடலம் ஒன்றை எடுத்து வந்து கடையின் முன்பு வைத்தார். இதனால் கடைக்கு வந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவர்களை பொருட்படுத்தாத குமார் மணியரசனிடம் மீண்டும் இறைச்சி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/7zb1f5mv/WhatsApp_Image_2025_02_09_at_13_28_36_9a072488.jpg)
இதுகுறித்து பழனிச் செட்டிபட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வந்த போலீஸார் குமார் எடுத்துவந்த சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று சடலம் எங்கு இருந்து எடுத்துவரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால் இறைச்சிக் கடைகளில் அதிக மக்கள் கூட்டம் கூடும் நேரத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, "குமார் போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் இதே கறிக்கடையில் வேலை பார்த்திருக்கிறார். கடைக்கு சரியாக வராமல் மயானத்தில் வேலை செய்து கொண்டு குடித்துக்கொண்டு சுற்றியிருக்கிறார். அதனடிப்படையில் தான் கறிக்கடையில் வந்து கறி கேட்டு பிரச்னை செய்திருக்கிறார். அவரிடம் விசாரித்து வருகிறோம். முழுமையான விசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றனர்.