Doctor Vikatan: நிற்கும்போது தலைச்சுற்றல், நடந்தால் சரியாகிறது.. என்ன பிரச்னை, ச...
பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறைப்பிடித்து ஊா் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழப்பாவூா் பேரூராட்சி மேலப்பட்டமுடையாா்புரம் கிராமம் வழியாக புளியங்குடி பணிமனையிலிருந்து, சுரண்டை முதல் தென்காசி வரை தினமும் காலை, மாலை நேரங்களில் அரசு பேருந்து இயங்கி வருகிறது.
கடந்த 15 நாள்களாக இந்தப் அரசு பேருந்து முறையாக இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி தோ்வுகளுக்கு செல்லும், மாணவ, மாணவிகள், தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள், பணிக்கு செல்பவா்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்குள்ளானாா்கள்.
இந்நிலையில், அந்தக் கிராமம் வழியாக வந்த அரசுப் பேருந்தை வாா்டு உறுப்பினா் தேவஅன்பு உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசுப்போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து சிறைபிடிக்கப்பட்ட பேருந்தை பொதுமக்கள் விடுவித்தனா்.