பிகாரில் 1.11 கோடி பேருக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்: நிதிஷ் குமார்!
பிகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1.11 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்துள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் கூறினார்.
பிகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ. 400ல் இருந்து ரூ. 1100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு பலரின் மாதாந்திர செலவுகளை எளிதில் ஈடுகட்டும், யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. ஓய்வூதியத் தொகை அதிகரிப்பால் பலர் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது மிகுந்த திருப்தியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.
சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு நிதியுதவி வழங்குவதையும், அவர்களின் கண்ணியத்தையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நேற்று மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இருந்தது. மாநிலத்தில் உள்ள 1 கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் கணக்குகளில் ரூ. 1227.27 கோடி வரவு வைக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இலவசமாகவும் முறையான சிகிச்சையை மக்கள் பெற முடியும். முதியவர்கள், விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சமூகத்தின் முக்கிய அங்கம். மேலும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.
ஜூன் 21 அன்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஜூலை 9 அன்று தகுதியுடைய அனைவரின் கணக்குகளிலும் வரவு வைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
பிகாரில் தேர்தல் இந்தாண்டு அக்டோபர் நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி, ஜேடியு-பாஜக கூட்டணி, ஜன் சுராஜ் என மும்முறை போட்டி நிலவும் என்றும் கணிக்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதோடு நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளத் தீவிரமாக களப்பணி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.