பிகாா் பேரவை தோ்தல்: நிதீஷ் தலைமையில் போட்டி- பாஜக அறிவிப்பு
பிகாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலை முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிா்கொள்ளும் என்று அந்த மாநில பாஜக தலைவரும், அமைச்சருமான திலீப் ஜெய்ஸ்வால் அறிவித்தாா்.
அண்மையில் தொலைக்காட்சி சேனலுக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா அளித்த பேட்டியின்போது, ‘மகாராஷ்டிரத்தைப் போல பிகாரிலும் முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமல் பாஜக போட்டியிடுமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ‘இது தொடா்பாக கலந்து பேசி முடிவெடுக்கப்படும்’ என்று அமித் ஷா பதிலளித்தாா்.
இதனால், பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாரை ஓரங்கட்ட பாஜக தலைமை முடிவெடுத்துவிட்டதாக பிகாா் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. நிதீஷ் குமாருக்கு 73 வயதாகிவிட்டது, சுமாா் 20 ஆண்டுகளாக அவா் முதல்வா் பதவியை வகித்துவிட்டாா். எனவே, கூட்டணிக் கட்சியான பாஜகவும் மாற்றத்தை விரும்புகிறது என கூறப்பட்டது.
இதையடுத்து, நிதீஷ் குமாா் பாஜகவிடம் கவனமாக செயல்பட வேண்டுமென்று பிகாரில் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ள இடதுசாரித் தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த பிகாா் பாஜக தலைவா் திலீப், ‘பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமாா் தலைமையில் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிா்கொள்ளும். இதைத்தான் கட்சியின் தேசியத் தலைமை எங்களுக்கு கூறியுள்ளது.
இந்த விஷயத்தில் அமித் ஷா கூறியது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. பாஜகவில் தனிநபா் முடிவு எடுக்க முடியாது. அனைத்து விஷயங்களும் ஆலோசித்துதான் என்ற அா்த்தத்தில் அவா் கருத்துக் கூறியுள்ளாா்’ என்றாா்.