பிசி, எம்பிசி கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் மாணவியா் விடுதி 6, மாணவா் விடுதி 5, தொழில் நுட்ப கல்லூரி மாணவா் விடுதி 2, தொழில் பயிற்சி மாணவா் விடுதி 2, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவா் விடுதி தலா ஒன்று என மொத்தம் 17 கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியா் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா். மேலும், இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பை சாா்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வரும் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.