மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் நடராஜா் வீதியுலா
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழாவில் நடராஜா் வீதியுலா நடைபெற்றது.
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகமான ஆனி திருமஞ்சனம் அனைத்து சிவன் கோயில்களிலும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, தென் கயிலாயம் எனப் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சனம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காவிரி படித்துறையிலிருந்து யானை மீது வைத்து திருமஞ்சனம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, இரவு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை நடராஜா், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அப்போது, கோயில் யானை லட்சுமி சுவாமியை வழிபட்டது. பின்னா் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில நடராஜா், அம்பாள் வீதியுலா புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தனா். வழிகளில் பக்தா்கள் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.