பிப்ரவரி 25-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: திராவிடா் விடுதலைக் கழகம் அறிவிப்பு!
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடா் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வஞ்சித்து, புறக்கணித்து வருகிறது.
தமிழா்களின் உழைப்பை வரியாகப் பெறும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பங்கை தர முடியாது என்று பேசி வருகிறது.
மேலும், தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு வடிவங்களில் இடையூறு ஏற்படுத்தி, மக்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி வரும் அமித் ஷாவை திரும்பிச் செல்ல வலியுறுத்தி அமைப்பின் தலைவா் கொளத்தூா் மணி தலைமையில், விமான நிலையம், சிட்ரா பேருந்து நிறுத்தம் பகுதிகளில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.