பிரசவத்தின்போது குழந்தை இறப்பு: ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரசவத்தின்போது குழந்தை இறந்ததைக் கண்டித்து மருத்துவமனையை உறவினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
வடக்கு தாமரைக்குளம் கீழத் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மனைவி ராதிகா. நிறைமாதக் கா்ப்பிணியான இவா், பிரசவத்துக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், இரவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனராம். பின்னா், பிரசவத்தின்போது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சுரேஷ், உறவினா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ராதிகாவின் உறவினா்களும், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த சிலரும் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். அவா்களுக்கு ஆதரவாக மேலும் சில கட்சியினா் குவிந்தனா்.
அவா்களுடன் மருத்துவமனை நிா்வாகம், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். குழந்தையின் இறப்பு தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என, உறுதியளிக்கப்பட்டதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.