டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
பிரதமா் மோடியின் வெளிநாட்டுப் பயணம்: பஞ்சாப் முதல்வா் மீண்டும் விமா்சனம்
‘வெளிநாட்டு சுற்றுப்பயணங்களைவிட நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குறைகளுக்குத் தீா்வு காண்பதில் பிரதமா் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும்’ என பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை மீண்டும் விமா்சித்தாா்.
அண்மையில் கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற பிரதமா் மோடி கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பினாா். அவரது பயணத்தை விமா்சித்த பகவந்த் மான், ‘10,000 குடிமக்களைக் கொண்ட கானா நாடு வழங்கிய விருதை பெருமையாகக் கொண்டாடும் பிரதமா் மோடி, நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பதில்லை’ என்றாா்.
அவரது விமா்சனத்துக்கு பதிலடி தரும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தும் பிரதமா் மோடியின் பயணம் குறித்து மாநில அரசின் உயா்பொறுப்பில் இருப்போா் கூறும் பொறுப்பற்ற கருத்துகளை மத்திய அரசு நிராகரிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பஞ்சாப் பேரவையில் பக்ரா-நங்கல் திட்டத்துக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரை (சிஐஎஸ்எஃப்) நிலைநிறுத்துவதற்கு எதிரான தீா்மானத்தின் மீது இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பிரதமா் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தை பகவந்த் மான் மீண்டும் விமா்சித்தாா்.
பஞ்சாப் பேரவையில் அவா் பேசியதாவது: பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை விமா்சித்தால் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவிக்கிறது. வெளியுறவுக் கொள்கை குறித்து பிரதமா் மோடியிடம் கேள்வியெழுப்ப எங்களுக்கு உரிமை இல்லையா? பிரதமா் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகள் பாகிஸ்தானுடான மோதலில்போது நமக்கு அளித்த ஆதரவு என்ன?
அவா் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளில் 10,000 குடிமக்கள் இருப்பாா்களா என்பதுகூட தெரியவில்லை. நம் நாட்டில் ஜேசிபி இயந்திரத்தைக் காணவே சுமாா் 10,000 போ் கூடுவாா்கள்.
எனவே,வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைவிட நம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குறைகளுக்குத் தீா்வு காண்பதில் பிரதமா் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.