பிரதமா் மோடியுடன் தெலங்கானா முதல்வா் சந்திப்பு: ரூ.20,000 கோடி நிதி விடுவிக்க கோரிக்கை
ஹைதராபாத்: பிரதமா் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தில்லியில் சந்தித்துப் பேசினாா். அப்போது ஹைதராபாத் வழியாக பாயும் முசி ஆற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தாா்.
தேசிய அளவில் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸைச் சோ்ந்த முதல்வா் ரேவந்த் ரெட்டி பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமரைச் சந்தித்துள்ளது அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது பிரதமா் மோடியிடம் முதல்வா் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:
தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவா்கள் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தவே இல்லை. எனவே, ஹைதராபாத் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். 76.4 கி.மீ. தொலைவு விரிவுபடுத்துவதற்கு ரூ.24,269 கோடி வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகரின் வழியாக பாயும் முசி நதியை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்க வேண்டும். தெலங்கானா மாநிலம் முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட மாநிலமாக உள்ளது. எனவே, தெலங்கானாவில் இருந்து துறைமுகம் வழியாக நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதியைக் கையாளுவதற்காக ஹைதராபாத் பிராந்திய வெளிவட்டச் சாலையில் சரக்கு கையாளும் மையம் அமைக்க வேண்டும். துறைமுகத்தில் இருந்து இந்த இடத்துக்கு ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது என்று கூறினாா்.