பேருந்தில் இளம்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள்
புணே: மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
அவரை பற்றிய தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
புணேயின் ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பேருந்துக்காக காத்திருந்த 26 வயதுப் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்ற ஒரு நபா், தனி இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துக்குள் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பினாா்.
மாநிலத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் ஈடுபட்டவா் தத்தாத்ரேய ராமதாஸ் கடே (37) என காவல் துறையினா் அடையாளம் கண்டனா். அவா் மீது ஏற்கெனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
புணேயில் தான் வசிக்கும் குனாட் கிராமத்தில் உள்ள கரும்புக் காடுகளில் அவா் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை கிடைக்க மாநில அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளாா்.