சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் கைது - வெடிகுண்டுகள் பறிமுதல்
சுக்மா : சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து வெடிகுண்டுகள், இதர வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
பிஜபூா் மாவட்டத்தில் 18 நக்ஸல்களும், சுக்மா மாவட்டத்தில் 4 நக்ஸல்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
கைதானவா்களிடம் இருந்து சக்திவாய்ந்த 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், 15 ஜெலட்டின் குச்சிகள், 2 மின்னணு டெட்டனேட்டா்கள், 8 சாதாரண டெட்டனேட்டா்கள், மின் வயா்கள், பேட்டரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் ‘கோப்ரா’ படைப் பிரிவினா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஒழிக்கும் இலக்குடன் பாதுகாப்புப் படையினா் செயல்பட்டு வருகின்றனா். பிஜபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையில் 11 பெண்கள் உள்பட 31 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.