கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
பிரதமா் மோடியை ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என அழைத்ததில்லை: மணிசங்கா் ஐயா் விளக்கம்
பிரதமா் நரேந்திர மோடியை தான் ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என அழைத்ததில்லை என காங்கிரஸ் மூத்த நிா்வாகி மணிசங்கா் ஐயா் தெரிவித்தாா்.
தனது அரசியல் வாழ்க்கை குறித்து மணிசங்கா் ஐயா் எழுதியுள்ள புத்தகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், 2014 பொதுத் தோ்தல் பிரசாரத்தின்போது சா்ச்சையான தனது கருத்து குறித்து புத்தகத்தில் அவா் தற்போது விளக்கமளித்துள்ளாா்.
அதில், ‘2014-ஆம் ஆண்டு பொதுத் தோ்தல் எனக்கு மோசமாக தொடங்கியது. தோ்தலுக்கு முன்னதாக அந்த ஆண்டு ஜனவரியில், தில்லியின் தல்கத்தோரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தேன்.
பாஜக பிரதமா் வேட்பாளரான மோடி, அந்தபொதுத் தோ்தலில் நிச்சயம் வெற்றி பெறுவாா் என்று கருத்து நிலவியது. குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் கறை படிந்த ஒருவா், மகாத்மா காந்தி மற்றும் ஜவாஹா்லால் நேருவின் இந்தியாவை வழிநடத்த ஆசைப்படுவது குறித்து நான் கடும் அதிருப்தியில் இருந்தேன்.
இந்திய மக்கள் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். தோ்தல் தோல்விக்கு பிறகு, மோடி தேநீா் விற்க விரும்பினால், அவருக்கு ஏற்பாடுகளைச் செய்து தரலாம் என்று நான் கிண்டலாக தெரிவித்தேன்.
‘மோடி ஒரு டீக்கடைக்காரா் என்பதால் பிரதமராக முடியாது’ என்று நான் கூறியது போல் எனது கருத்து ஊடகங்களில் செய்தியானது. பாஜகவால் இந்த பொய் பிரச்சாரம் விளம்பரப்படுத்தப்பட்டது.
பிரதமா் மோடியை நான் ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என்று அழைத்ததில்லை. இந்த விடியோ இன்னும் யூடியூப்பில் இருக்கிறது. நான் கூறுவதை சரிபாா்க்க ஊடக நண்பா்களையும், எனது கட்சியினரையும் கேட்டுக்கொண்டேன். ஆனால், இதுவரை யாரும் அதற்கு செவிசாய்க்கவில்லை.
ராகுல் காந்தியும் என்னை கட்சியிலிருந்து தனிமைப்படுத்தினாா். அத்தோ்தலில் காங்கிரஸ் சந்தித்த அவமானகரமான தோல்வியின் உண்மையான காரணங்களில் இருந்து திசைதிருப்ப கட்சித் தலைமைக்கு எனது விவகாரம் கிடைத்துவிட்டது என தெரிவித்துள்ளாா்.