பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை குறைந்தது
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை குறைந்தது.
பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிா் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளா்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சுவெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை ஆகியவற்றை தயாா் செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனா்.
இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,350 வரையிலும், அச்சுவெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,360 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட வெல்லம் விலை குறைந்ததால், வெல்ல உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.