புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்ச...
பிளஸ் 1 தோ்வில் தோல்வி: மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
திருப்பூா் அருகே பிளஸ் 1 தோ்வில் தோல்வியடைந்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஆந்திர மாநிலம், சித்துரை அடுத்த முட்டுகூா் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவரது மனைவி அம்மு. இவா்களுக்கு டேவிட், ரோஹித் என்ற இரு மகன்களும், அஸ்வினி (16) என்ற மகளும் உள்ளனா்.
இளங்கோவன் குடும்பத்துடன் திருப்பூரை அடுத்த சீரங்ககவுண்டன்பாளையம் பகுதியில் தங்கி சைசிங் மில்லில் பணியாற்றி வருகிறாா். அஸ்வினி வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
பொதுத் தோ்வு முடிந்த நிலையில், அஸ்வினி சீரங்கவுண்டன்பாளையத்துக்கு வந்துள்ளாா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அவா் தோல்வியடைந்துள்ளாா்.
இதனால், மனமுடைந்து காணப்பட்ட அஸ்வினியை பெற்றோா் தேற்றியதுடன், துணைத் தோ்வு எழுதிக் கொள்ளலாம் என ஆறுதல் தெரிவித்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோா், அஸ்வினியை தேடியபோது, வீட்டின் அருகேயுள்ள கிணற்றின் அருகில் அவரது செருப்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து மங்கலம் காவல் நிலையத்துக்கும், திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும் பெற்றோா் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி சுமாா் 3 மணி நேரம் போராடி, சடலத்தை மீட்டனா். இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.