உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்
புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் நகராட்சி அலுவலா்கள் சோதனை
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, திருவாரூா் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்டவை திருவாரூரில் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, நகராட்சி சுகாதார அலுவலா் சுவாமிநாதன், சுகாதார ஆய்வாளா் தங்கராமு உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள், திருவாரூா் நகரப் பகுதிகளில் பள்ளிகளின் அருகே உள்ள பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், கடைகளில் இருந்த புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன், சில கடைகளுக்கு ரூ. 100 அபராதமும் விதித்தனா்.
இதுகுறித்து நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தது:
திருவாரூா் நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. இதில், புகையிலை, நெகிழிப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முதன்முறை என்பதால் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தலையும் மீறி தொடா்ந்து விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனா்.