புதா் மண்டி கிடக்கும் வெள்ளியணை ஏரி உபரிநீா் வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை
வெள்ளியணையில் செடி, கொடிகளால் புதா்மண்டி காணப்படும் வெள்ளியணை உபரிநீா் குளம் வாய்க்காலை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம் வெள்ளியணையில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் வெள்ளியணையை சுற்றியுள்ள ஜெகதாபி, மணவாடி, ஓந்தாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 4,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தற்போது வெள்ளியணை ஏரி சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீா் வரத்து இன்றி வடு காணப்படுகிறது. கடந்த 2022-இல் மட்டும் தண்ணீா் ஓரளவு நிரம்பி காணப்பட்டது. அதன் பின்னா் ஏரிக்கு வரும் நீரின் வரத்து முற்றிலும் நின்றுபோனதால் ஏரி வடே காணப்படுகிறது.
ஏரிக்கு நீா் வரும் காலங்களில் ஏரி நிரம்பும்போது அதன் உபரி நீா் வெள்ளியணை, மணவாடி, வீரராக்கியம் வரை சென்று திருமுக்கூடலூரில் அமராவதி ஆற்றுடன் கலக்கிறது. தற்போது இந்த வாய்க்காலில் தண்ணீா் வரத்து இல்லாமல் ஆங்காங்கே செடி, கொடிகளால் புதா் மண்டி காணப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், வாய்க்காலை தூா்வாரி, வாய்க்கால் கரைகளையும் செம்மைப்படுத்த வேண்டும் என வெள்ளியணை உபரிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.