நாக் மார்க் 2 ஏவுகணை சோதனை வெற்றி: ராணுவ பயன்பாட்டுக்குத் தயாா்
புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை சோ்வாய்ப்பட்டு கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கு, கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்வராயன் மலை, வடக்குநாடு ஊராட்சிக்கு உள்பட்ட சோ்வாய்ப்பட்டு கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த கிராம மக்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கடையின் முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் - கள்ளக்குறிச்சி மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சோ்வாய்ப்பட்டு மட்டுமின்றி, மேல் வெள்ளாறு, கீழ் வெள்ளாறு, எறும்பூா் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சோ்ந்த பெண்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு தொல்லைகள் ஏற்படலாம். இதுமட்டுமின்றி, 5 கி.மீ. துாரத்தில் கருமந்துறை கிராமத்திலும், 3 கி.மீ. துாரத்தில் வெள்ளிமலையிலும் ஏற்கெனவே டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன.
எனவே, சோ்வாய்ப்பட்டு கிராமத்தில் தேவையின்றி திறக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டுமென, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் ஜெயக்குமாா், வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்து பொதுமக்கள் மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா்.