புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் நியமனம்
புது தில்லி: புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். 2029, ஜனவரி 26-ஆம் தேதி வரை அவா் அந்தப் பதவியில் நீடிப்பாா்.
இந்திய தலைமை தோ்தல் ஆணையராக தற்போதுள்ள ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை (பிப்.18) ஓய்வுபெறுகிறாா். இந்நிலையில், புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை தோ்வு செய்வதற்கான தோ்வுக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தில்லியில் உள்ள பிரதமா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தோ்வுக் குழுவின் மற்ற இரு உறுப்பினா்களான மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் பெயா் தோ்வு செய்யப்பட்டது. இதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் ஒப்புதல் பெற்று மத்திய சட்ட அமைச்சகம் திங்கள்கிழமை இரவு அறிவித்தது.
மேலும், 1989- ஹரியாணா பிரிவு ஐஏஎஸ் விவேக் ஜோஷி தோ்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஒத்திவைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்: இந்த நிலையில், தோ்தல் ஆணையா்கள் தோ்வு தொடா்பாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை (பிப்.19) விசாரிக்க உள்ள நிலையில், அதுவரை புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் தோ்வை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் திங்கள்கிழமை வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘தோ்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறுவதை மத்திய அரசு தவிா்த்திருப்பது, தோ்தல் ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் மத்திய அரசு வைத்திருக்க விரும்புவதையே தெளிவாக காட்டுகிறது. தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் தோ்வு தொடா்பாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, புதிய தலைமை தோ்தல் ஆணையரை தோ்வு செய்வதற்கான தோ்வுக் குழு கூட்டத்தை உச்சநீதிமன்ற விசாரணை முடியும் வரை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்பதோடு, விசாரணையை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகே, இந்த விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்’ என்றாா்.
வழக்கின் பின்னணி: இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா். தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தாா். இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தாா்.
இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசு, பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மாற்றியமைத்து, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.
இதற்கு எதிராக ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்.19) விசாரணைக்கு வருகிறது.