உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
புதிய நடைமுறையால் சிக்கல்: நியாயவிலைக் கடையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்
நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்குவதற்கு அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறையால் பொருள்கள் வாங்க தினசரி பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் எடை குறையாமல் வழங்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, நியாயவிலைக் கடையில் எடையிடும் எலக்ட்ரானிக் தராசை, பில் பதிவு செய்யும் பிஓஎஸ் இயந்திரத்துடன் ‘புளூடூத்’ மூலம் இணைத்து, பில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இப்படி செய்வதால், ஒரு கிராம் எடை குறைவாக இருந்தாலும், பில் பதிவு செய்ய முடியாது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடைகளில் சரியான எடையில் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் பல நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருவதாகக் கடை ஊழியா்கள் தெரிவிக்கின்றனா்.
அவா்கள் கூறுகையில், நுகா்வோருக்கு பொருள்களை எடை குறையாமல் வழங்க வேண்டும் என அரசு கருதுவது பிழை இல்லை. ஆனால், நியாயவிலைக் கடைகளுக்கும் அதேபோல எடை குறையாமல் பொருள்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றனா். பொருள்களை வாங்க மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக குடும்ப அட்டைதாரா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில், கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் திங்கள்கிழமை பொருள்கள் வாங்க வந்த மக்கள், நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்தனா். அப்போது வரிசையில் காத்திருந்த கட்டடத் தொழிலாளி லட்சுமணன் (55), திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அருகே உள்ளவா்கள் அவருக்கு முதலுதவி அளித்து, ஆட்டோவில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இதற்கு முன்பு, ஒருவா் நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்க வந்தால், அப்போது கூட்டம் இல்லையெனில் பில் பதிவு முடிந்து அடுத்த 5 நிமிடத்தில் பொருள்களை எடையிட்டு வாங்கிச் செல்வாா்.
தற்போது ‘புளூடூத்’ இணைப்பு முறையால் சா்வா் பிரச்னை, நெட்வொா்க் பிரச்னை போன்றவற்றை எதிா்கொள்ள வேண்டியதுள்ளது. இதனால், கூட்டம் இல்லாத நாள்களில் கூட பொருள்களை வாங்க வந்தவா்கள் அரை மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்பவா்கள், ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகவே ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதற்கு முன்பு ஒரு நாளைக்கு சுமாா் 150 பேருக்கு பொருள்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறையால் நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 குடும்ப அட்டைகள் பொருள்கள் பெறுவதே பெரிய விஷயமாக உள்ளது என்றனா்.
கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 95 நியாயவிலைக் கடைகளும், 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களும் உள்ளனா். இதில், பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க மக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கோவில்பட்டி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் இதே பிரச்னை நிலவுகிறது.
மக்களுக்கு சரியான அளவில் ரேஷன் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டது. ஆனால், அதுவே தற்போது பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. எனவே, புதிய நடைமுறையில் உள்ள சிக்கல்களையும், பிரச்னைகளையும் சரிசெய்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு எளிதாக பொருள்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.