ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல்; "இதுதான் திராவிட மாடலா?"- நயினார் நாகேந...
புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! - அதிரடியாக அகற்றிய நகராட்சி
புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான இடங்களை, அரசியல் செல்வாக்குடன் தனி நபர்கள் ஆக்கிரமிக்கும் செயல், நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக கூடாரத்தைப் போடும் அவர்கள், நாளடைவில் அங்கு கான்கிரீட் கட்டிடங்களை கட்டி ஆக்கிரமித்து விடுகிறார்கள்.
குறிப்பாக சாலையோரத்தில் செய்யப்படும் இப்படியான ஆக்கிரமிப்புகளால், சாலை குறுகி புதுச்சேரியில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நகரின் முக்கிய இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தள்ளு வண்டிக் கடைகளைப் போட்டு இடம் பிடிக்கும் ரௌடிகள், அதனை உள்வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர்.

இதனைக் கண்டுபிடித்த புதுச்சேரி நகராட்சி, சமீப காலமாக அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகிறது. கடற்கரை சாலையில் இருக்கும் தலைமைச் செயலகத்திற்கு அருகில் எந்தவித அனுமதியும் இன்றி ஆண்டுக்கணக்கில் செயல்பட்டு வந்த டீ கடையால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.
தலைமைச் செயலகத்திற்கு வரும் அதிகாரிகளின் வாகனங்களைக் கூட அங்கு திருப்ப முடியாது. நல்ல வருவாய் பார்த்துக் கொண்டிருந்த அந்த டீ கடையால், புதுச்சேரி நகராட்சிக்கு எந்தவித வருவாயும் இல்லை.
இந்த நிலையில் அந்தக் கடையை விரிவாக்கம் செய்ய நினைத்தபோது, புதுச்சேரி நகராட்சி அதை அதிரடியாக அகற்றியது.
இந்த நிலையில்தான் கடற்கரை சாலையில் புதுச்சேரி சுற்றுலாத் துறையின் `லே கஃபே’ உணவகத்துக்கு அருகில் இருக்கும் இடத்தில், `I Pondy - Pondicherry information Bureau’ என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளாக தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
சுற்றுலா தகவல் மையம் என்ற பெயரில், தனி நபர்களின், நிறுவனங்களின் விளம்பரமும் செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதற்காக அவர்கள் எந்த துறையிடமும், குறிப்பாக நகராட்சியிடமும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த மையத்தை, பெரிய கூடாரமிட்டு சமீபத்தில் விரிவாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த நகராட்சி ஊழியர்கள், இங்கு தகவல் மையம் அமைப்பதற்கு யாரிடம் அனுமதி பெற்றீர்கள் என்று கேட்டிருக்கின்றனர்.
அதற்கு அவர்கள் யாரிடமும் அனுமதி பெறவில்லை என்று கூறியதும், அங்கிருந்த கூடாரத்தை அதிரடியாக அகற்றி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, ``புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை இருக்கும்போது, தனி நபர்கள் ஏன் அதை செய்ய வேண்டும் ?
அதிலும் மிக முக்கியமான கடற்கரை சாலையில், எந்தவித அனுமதியும் பெறாமல் இத்தனை ஆண்டுகள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்” என்றனர். புதுச்சேரி நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.