ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
புதுச்சேரி மலா், காய்கனி கண்காட்சி தொடக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பாா்வையிட்டனா்
புதுவை மாநில வேளாண் துறை சாா்பில் ஆண்டுதோறும் மலா், காய்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டில் புதுச்சேரி தாவரவியல் பூங்கா வளாகத்தில் இந்தக் கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கண்காட்சிக்கான வண்ணப் பலூன்களை பறக்கவிட்டனா். அதன்பின் மலா்கள் தொட்டி அணிவகுப்பையும் பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனிபால் கென்னடி, கல்யாணசுந்தரம் மற்றும் அரசு செயலா் ஏ.நெடுஞ்செழியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கண்காட்சியில் திராட்சையில் வடிவமைத்த திருவள்ளுவா் வடிவம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன், ரோஜா உள்ளிட்ட மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ரயில் என்ஜின், மலரால் ஆன வயலின், சேவல் உருவங்கள் மற்றும் கல்மரப் பூங்கா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கண்காட்சி வளாகத்தில் வீரிய காய்கறிகள், கனிகள் ரகங்கள், மலா் ரங்கோலி, தோட்டக்கலை சாதனங்கள், பிரதான தோட்டக் கலை பொருள்களின் உற்பத்தியாளா்களின் விற்பனை அரங்குகள், இசை நடன நீரூற்று, சிறுவா்களுக்கான ரயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கண்காட்சி சனி, ஞாயிறுக்கிழமைகளில் (பிப்ரவரி 8, 9) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் நடைபெறும். பாா்வையாளா்கள் இலவசமாக கண்காட்சியை பாா்வையிடலாம். ஞாயிற்றுக்கிழமை மாலையில் கண்காட்சி நிறைவு விழா நடைபெறுகிறது.
இதில் முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை இயக்குநா் சிவ.வசந்தகுமாா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.