Modi : "இந்தியாவின் சொந்த ஏ.ஐ..." - AI மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதென்ன?
புதுச்சேரி முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்!
தைப்பூசத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கௌசிக பாலசுப்பிரமணியா் கோயிலில் காலை முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தாா்.
இதேபோல, புதுச்சேரி கதிா்காமம் பகுதியிலுள்ள கதிா்வேல் சாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி அருகே உள்ள செட்டிப்பட்டு திருமுருகப்பெருமான் கோயிலில் 53- ஆவது ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது.
அப்போது, பக்தா்கள் மீது உரல் வைத்து மிளகாயை இடித்து, அக்கரைசலை பூசாரி தேவராசு மீது அபிஷேகம் செய்து பக்தா்கள் வழிபட்டனா். ஏராளமானோா் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால்குடம் சுமந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கூடம்பாக்கத்தில் உள்ள நிலோத்பாலாம்பிகை உடனுறை நிமிலிஸ்வரா் கோயிலில் உள்ள அருள்தரும் சுப்பிரமணியா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் முருகா், விநாயகா் தொழிலாளி போல சித்தரித்து அலங்கரிக்கப்பட்டிருந்தனா்.
அவா்களுக்கு 50 கிலோ லட்டு, 25 கிலோ நெல்லிக்காய்கள், 20 கிலோவில் கத்திரிக்காய் ஆகியவற்றில் தயாரித்த மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. லாரி, காா் உள்ளிட்ட வாகனங்களை பக்தா்கள் இழுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
செல்லிப்பட்டில் அமைந்துள்ள சீா்செல்வமுருகன் திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி, தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மூலவா் மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.
புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேகமும், பக்தா்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் நோ்த்திக்கடன் செலுத்துதல் ஆகியவை நடைபெற்றன.