Modi : "இந்தியாவின் சொந்த ஏ.ஐ..." - AI மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதென்ன?
புதுவை சட்டப்பேரவையில் காகிதமில்லா கூட்டத்துக்கு கணினிகள் அமைப்பு
புதுவை மாநில சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் கூட்டங்களை நடத்தும் வகையில் 34 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தயாராக இருந்தாலும் வரும் மாா்ச் மாத கூட்டத்தில்தான் செயல்படுத்தப்படும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.
புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப்.12) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதையடுத்து, பேரவைக் கூட்ட அரங்கம் தயாா் நிலையில் உள்ளதா என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, மத்திய அரசு வழங்கிய ரூ.8.6 கோடியில் காகிதமில்லா பேரவைக் கூட்டம் நடத்துவதற்காக பொருத்தப்பட்டிருந்த கணினிகளையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அனைத்து மாநில சட்டப்பேரவைக் கூட்டங்களையும் காகிதமில்லாத கூட்டங்களாக நடத்துவதற்கு நிதி அளித்தது. அதன்படி, புதுவை மாநில சட்டப்பேரவைக்கும் ரூ.8.6 கோடி நிதியை மத்திய அரசு அளித்தது. இதன்மூலம் பேரவைத் தலைவா், முதல்வா் மற்றும் அமைச்சா்கள், உறுப்பினா்கள் அனைவருக்கும் இருக்கை முன் நவீன கணினி அமைக்கப்பட்டுள்ளன.
அந்த கணினி வாயிலாகவே உறுப்பினா்கள் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை பாா்த்து படித்து பேச வேண்டும். உறுப்பினா்களின் கேள்வி, பதில்களும் கணினி மூலம் பதிவு செய்யப்படவுள்ளன.
கணினி இயக்க முறையை கண்காணிப்பதற்கு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. கணினி செயல்பாடுகளை முறைப்படி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை காலை தொடங்கிவைக்கிறாா்.
காகிதமில்லாத கூட்டத்தை நடத்துவதற்கான தயாா் நிலையில் புதுவை பேரவை கூட்டரங்கம் உள்ளது. ஆனால், வரும் மாா்ச்சில் புதுவைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ள கூட்டத்தில்தான் கணினிகள் செயல்படுத்தப்படவுள்ளன.
பேரவைக் கூட்டத்தில் மறைந்த தலைவா்களுக்கான இரங்கல் தீா்மானம் உள்ளிட்டவை முன்வைக்கப்படவுள்ளன என்றாா் அவா்.