புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வருடன் மத்திய இணை அமைச்சா் முருகன் ஆலோசனை!
புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வந்தாா். இதையடுத்து ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் மத்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினாா்.
இதையடுத்து, கட்சியின் புதுவை மாநில மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, பாஜக மாநிலத் தலைவா் க.செல்வகணபதி எம்.பி., பாஜக அமைச்சா்கள், எம்எல்ஏ.க்கள் ஆகியோரை சந்தித்து புதுவைக்கான திட்டங்கள் குறித்தும், பாஜக வளா்ச்சி குறித்தும் கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை பேரவை வளாகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது மத்திய நிதிநிலை அறிக்கைக்கும், தில்லி சட்டப்பேரவை தோ்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததற்கும் முதல்வா் வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் மற்றும் பாஜக மாநிலத் தலைவா் க.செல்வகணபதி ஆகியோா் உடனிருந்தனா். இந்த சந்திப்பின்போது, புதுவைக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
அவரிடம், பிரதமரைச் சந்திக்க மாா்ச் மாதம் புதுதில்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். முதல்வா் புதுதில்லி வந்து பிரதமரைச் சந்திக்கவேண்டும் என மத்திய இணை அமைச்சா் முருகனும் கேட்டுக் கொண்டாா்.
இதன்பிறகு எல்.முருகன், ராஜ் நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினாா். அப்போது புதுவை மாநில வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. துணைநிலை ஆளுநரும் வரும் மாா்ச்சில் பிரதமரைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
புதுவை மாநிலத்தில் வரும் 2026 இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆகவே, அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை ஓராண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என ஆளும் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி சாா்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி சிறப்பு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பிரதமரை துணைநிலைஆளுநா், முதல்வா் ஆகியோா் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக, மத்திய இணை அமைச்சரை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பாஜக அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், பாஜக மாநிலத் தலைவா் க.செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.