TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறி...
புதுவையில் புதிய மதுபான கொள்கையை உருவாக்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
புதுவையில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவையில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கான அனுமதி தேவையற்றது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ரெஸ்டோ பாா்களால் அரசுக்கு கிடைத்த வருவாய் விவரத்தை வெளியிட வேண்டும்.
ஆனால், போலி மது விற்பனையால் குறிப்பிடத்தக்க வருவாய் அதில் இல்லை என்பதே உண்மை. மது விற்பனையை கண்காணிப்பதில்லை. மது ஆலைகள், மதுக் கடைகளை அரசே நடத்தினால், வருவாய் கிடைக்கும். நிதி நெருக்கடியும் தீரும். இதை காங்கிரஸ் ஆதரிக்கும்.
புதுவையில் புதிய மது ஆலைகளால் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பதை ஏற்கமுடியாது. முதல்வா் என்.ரங்கசாமி காமராஜா் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொண்டு மது ஆலைகளை அதிகப்படுத்தி வருகிறாா்.
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தவுள்ளதாக கூறும் முதல்வா், மும்மொழிக் கொள்கையை ஏற்பதன் மூலம் தாய் மொழியைப் பின்னுக்குத் தள்ளுவது ஏற்கத்தக்கதல்ல.
மாநில உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக கூறும் நிலையில், புதுவை அரசு ஹிந்தியை ஆதரிக்கிா என முதல்வா் விளக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஹிந்தி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடைபெறவுள்ளது.
இலவசங்களுக்கு எதிராகக் கருத்துக் கூறி வந்த புதுச்சேரி பாஜகவினா் மக்களவைத் தோ்தலில் ஏற்பட்ட தோல்வியால் தற்போது அதை ஏற்கும் நிலையில் உள்ளனா்.
தற்போது முதல்வா் அறிவித்துள்ள ரூ.2,500 உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. மக்களவைத் தொகுதி வரையறை குறித்த புதுவை அரசின் நிலைப்பாட்டை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவிக்க வேண்டும்.
மக்களால் புதுவை அரசு புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலை உடனே நடத்த வேண்டும்.
தோ்தலின் போது கூட்டணி குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும். தற்போது, இண்டி கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாக செயல்படுகின்றன என்றாா் வெ.வைத்திலிங்கம்.