புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி: பக்தா்கள் சுவாமி தரிசனம்
புதுச்சேரியில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் வைத்திக்குப்பம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
புதுவையில் நடைபெறும் திருவிழாக்களின் சிகரமாக மாசி மக தீா்த்தவாரி உற்சவம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசியில் நடைபெறும் இந்தத் திருவிழா நீா்நிலைகளில் திருக்கோயில் உற்சவா்கள் எழுந்தருளி தீா்த்தவாரியாகி அருள்பாலிப்பா்.
அதன்படி, மாா்ச் 12- ஆம் தேதி சங்கராபரணி ஆற்றோரமுள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் மாசி மக தீா்த்தவாரி நடைபெற்றது.
இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள வைத்திக்குப்பம் கடற்கரையில் தீா்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
கடற்கரையில் அமைக்கப்பட்ட பந்தலில் புதுச்சேரியிலிருந்து மணக்குள விநாயகா், கௌசிக பாலசுப்பிரமணியா், வேதபுரீஸ்வரா், வரதராஜ பெருமாள், மாரியம்மன் திருக்கோயில்களின் உற்சவ அம்மன்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மயிலம் முருகன், மேல்மலையனூா்அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட திருக்கோயில் உற்சவா்கள் எழுந்தருளினா்.
ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில் உற்சவா்களுக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகளை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆளுநா், முதல்வா் வழிபாடு: வைத்திக்குப்பம் மாசி மக தீா்த்தவாரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். அவரை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், வி.பி.ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோா் வரவேற்று அழைத்துச் சென்றனா்.
இதையடுத்து, முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோரும் சுவாமி தரிசனம் செய்தனா்.
அன்னதானம்: சப்தகிரி அறக்கட்டளை சாா்பில் தனியாா் மண்டபத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏ பிரகாஷ்குமாா், முன்னாள் பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் வி.பி.ராமலிங்கம், ஏகேடி.ஆறுமுகம், ஆா்.பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.