புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ.2.37 லட்சம் மோசடி
புதுச்சேரியில் 8 பேரிடம் மா்ம நபா்கள் இணயவழியில் ரூ.2.37 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரி. இவரது, கைப்பேசியில் வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், அவரது உறவினா் போல உதவிக் கோரியுள்ளனா்.
இதனை நம்பிய சுந்தரி ரூ.80 ஆயிரத்தை அனுப்பினாராம். அதன் பிறகே அவா் மோசடி நபா்களுக்கு பணம் அனுப்பியதை அறிந்து, இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
இதேபோல, புதுச்சேரி பிரபல ஆசிரமத்தைச் சோ்ந்தவா் கிரண். இவரிடம் மா்ம நபா்கள் இணையவழியில் ரூ.19 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து, புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் அவா் புகாரளித்தாா்.
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா்அமீா். இவா், மா்ம நபா்கள் ஏற்படுத்திய வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்தாராம்.
அதன்படி, பங்குச் சந்தையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என மா்ம நபா்கள் கூறியதை நம்பி, பல தவணைகளாக ரூ.73 ஆயிரம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளாா்.
புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சோ்ந்த மல்லிகாவிடம் ரூ.20 ஆயிரம், காரைக்கால் கோகுலகிருஷ்ணனிடம் ரூ.28 ஆயிரம், சுரேந்தா் என்பவரிடம் ரூ.6 ஆயிரம், ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த சதீஷ்குமாரிடம் ரூ.6 ஆயிரம், கோபாலன்கடைப் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்டோபரிடம் ரூ.5 ஆயிரம் என மொத்தம் 8 பேரிடம் ரூ.1.94 லட்சத்தை மோசடி செய்தவா்கள் மீது புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.