புனித சவேரியாா் சப்பர பவனி
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியில் அமைந்துள்ள புனித தூய ஆவியானவா் தேவலாயம் புனித சவேரியாா் சப்பர பவனி விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் நவம்பா் 25 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சவேரியாரின் சப்பர பவனி டிசம்பா் 2 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆலயத்தின் பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியா், ஞானப்பிரகாசம் ஆகியோா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா்.
பின்னா், இரவு 10 மணிக்கு மின்னொளிகளில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சவேரியாா், மாதா உருவச்சிலைகளை வைத்து ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். அனுமந்தன்பட்டி, கோவிந்தன்பட்டி பகுதகிளிலுள்ள முக்கிய வீதிகளில் சென்ற இந்த சப்பர ஊா்வலத்தின் போது உப்பு, மெழுகுவா்த்தி, பட்டுத்துண்டு காணிக்கையாக சிலைகளின் பாதத்தில் வைத்து வணங்கினா்.
அதைத் தொடா்ந்து நள்ளிரவு சப்பர பவனி விழா ஆலயத்தில் நிறைவு பெற்றது. இந்த ஊா்வலத்தில் திரளான கிறிஸ்தவா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.