பும்ராவை எதிர்கொள்வது கடினம்: ஆஸி. அறிமுக வீரர்!
சிட்னியின் வேகமான ஆடுகளத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்வது கடினம் என்று ஆஸ்திரேலிய அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டெர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்- கவாஸ்கர் தொடரின் 5-வது மற்றும் கடைசிப் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 40 ரன்கள் விளாசினார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி விக்கெட்டாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். அதனுடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க |சிட்னி டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய கவாஜா! ஏன்?
ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டெர் கூறுகையில், “இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும் வகையில் இருக்கிறது. ஆனால், ஜஸ்பிரித் பும்ரா மாதிரியான உலகத் தரம் வாய்ந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் எங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
அவரது லைன் மற்றும் லென்த் இரண்டுமே தனித்துவமானவை. இதனால், இந்த ஆடுகளம் அவருக்கு சாதகமானதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட வேகமான ஆடுகளத்தில் இந்திய அணியை 200 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆக்கியது மிகவும் பாராட்டுக்குரியது.
இதையும் படிக்க |35 வயதில் சாதனை படைத்த ஸ்காட் போலண்ட்!
ஆடுகளத்தில் அதிகளவிலான புல் இருக்கிறது. இது சாதாரண ஆடுகளம் அல்ல. ஸ்காட் போலண்ட் சிறப்பாக பந்து வீசினார். அவர் ஏன் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதற்கு சிறந்த உதாரணம். சில பந்துகள் விளையாட முடியாததாக இருந்தாலும், விக்கெட் எடுப்பது கடினமாக இருந்தது.
ரிஷப் பந்த மற்றும் ஜடேஜா இடையே நல்ல பாட்னர்-ஷிப் அமைந்தது. ஸ்லிப்பில் இருந்து விராட் கோலியின் கேட்சைப் பிடித்தது சுவாரசியமாக இருந்தது. மேலும் ஸ்லிப்பில் இருந்து வீரர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கும் அருமையாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவது ஒரு பெருமையான தருணம். ஒரு மிகச் சிறிய இடத்தில் இருந்து வந்த எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.