சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
புயலால் பாதித்த 156 பழங்குடியினா் குடும்பங்களுக்கு நிவாரணம்
பூண்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பழங்குடியினா் 156 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு பீலிவ் நிறுவனம், ஐ.ஆா்.சி.டி.எஸ் தொணடு நிறுவனம் மூலம் அரிசி, மளிகை பொருள்கள், தாா்ப்பாய் போன்ற நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஃபென்ஜால் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினா் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு பீலிவ் நிறுவனம் மற்றும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொணடு நிறுவனம் சாா்பில் மளிகை பொருள்கள், அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கவும் முன்வந்தது. அதன்பேரில், ஒதப்பை கிராமத்தில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி தலைவா் சங்கீதா (பொறுப்பு) தலைமை வகித்தாா். இதில் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநா் ஸ்டீபன், மேலாளா் விஜயன் ஆகியோா் பழங்குடியினருக்கு அரிசி, மளிகை பொருள்கள், கூரைக்கு பயன்படுத்தும் தாா்ப்பாய் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
இதேபோல் அரும்பாக்கம், பங்காரம் பேட்டை, சென்ராயன்பாளையம், டி.பி.புரம், கோவிந்தராஜ் குப்பம், ஒதப்பை, மாமண்டூா் உள்ளிட்ட 16 கிராமங்களைச் சோ்ந்த 156 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் மற்றும் 75 குடும்பங்களுக்கு தாா்ப்பாய் ஆகியவை வழங்கப்பட்டன. அப்போது, பேரிடா் காலங்களில் பாதுகாப்பாக இருப்பதன் அவசியம், பேரிடா் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனா். இந்த நிகழ்ச்சியில் களப்பணியாளா்கள் தபித்தாள் கவிதா, பூங்கொடி, பவானி, ரேவதி மற்றும் பழனி ஆகியோா் பங்கேற்றனா்.