பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
ஆவடியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி சாலையில் தவறி விழுந்து திங்கள்கிழமை உயிரிந்தார்.
ஆவடி டேங்க் பேக்டரி குடியிருப்பைச் சேர்ந்தவர் தேவராஜின் மனைவி கிரிஜா (63). இந்த நிலையில் திங்கள்கிழமை கிரிஜா அரக்கோணத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு புறப்பட்டார். இவர் ஆவடி அஜய் ஸ்டேடியம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகரப் பேருந்தில் ஏறி ஆவடி பேருந்து நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த பேருந்து ஆவடி டேங்க் பேக்டரி சாலை, காவல் உதவி ஆணையர் அலுவலகம் அருகே வந்த போது, சாலையில் உள்ள பள்ளத்தில் பேருந்து ஏறி இறங்கியது. அப்போது கிரிஜா பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கிரிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்து, கிரிஜாவின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரவி (58) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனர்.