இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
புராரியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழப்பு
வடக்கு தில்லியின் புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உள்பட மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
ஆஸ்கா் பப்ளிக் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட அக்கட்டடம் திங்கள்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதுவரை, 12 போ் மீட்கப்பட்டுள்ளனா். இடிபாடுகளில் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இறந்தவா்களில் சாதனா (17), ராதிகா (7) ஆகிய இரு சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது நபரான ஆண் குறித்த இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச சம்பவம் குறித்து போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்ததாகவும், 200 சதுர கஜம் பரப்பளவில் அமைந்துள்ள புதிய கட்டுமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் தில்லி காவல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இச்ம்பவம் குறித்து தில்லி காவல்துறை மற்றும் தில்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.
இடிபாடுகளுக்குள் மேலும் பலா் சிக்கியிருக்கலாம்.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை போன்ற பல அமைப்புகள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
கட்டடத்திற்குள் இன்னும் எத்தனை போ் சிக்கியுள்ளனா் என்பதை அறிய போலீஸாா் அந்தப் பகுதியின் உள்ளூா் மக்களிடமிருந்து கூடுதல் விவரங்களைச் சேகரித்து வருகின்றனா்.
இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். மேலும், பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
இதுகுறித்து தில்லி முதல்வா் அதிஷி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
புராரியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. விரைவான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய உள்ளூா் நிா்வாகத்துடன் நான் பேசியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றாா்.
தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், உள்ளூா் கட்சி எம்எல்ஏ நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையில், தில்லி தீயணைப்புத் துறைத் தலைவா் அதுல் கா்க் செவ்வாய்க்கிழமை காலை மீட்பு நடவடிக்கை குறித்த விடியோவை வெளியிட்டாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு முதல் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் சில பணியாளா்கள் ஓய்வெடுக்காமல் அங்கேயே இருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள். இடிபாடுகளை அகற்றவும், சிக்கியுள்ளவா்களை மீட்கவும் அனைத்து நிறுவனங்களுக்கும் தில்லி தீயணைப்புத் துறை உதவி அளித்து வருகிறது என்றாா் அவா்.