பூச்சி மருந்து குடித்த தொழிலாளி சாவு!
வெள்ளக்கோவில் அருகே வயிற்றுப் புண்ணுக்கு பூச்சி மருந்து குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை சோ்வகாரன்பாளையம் காந்தி நகரைச் சோ்ந்தவா் பி.முருகன் (55). விவசாய பயிா்களுக்கு மருந்தடிக்கும் வேலை செய்து வந்தாா். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வயிற்றில் புண் ஏற்பட்டு, அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். குடியை விடாததால் குணமாகவில்லை.
இந்நிலையில் புதன்கிழமை ஒரு தோட்டத்தில் களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருக்கும்போது, களைகளையே காயவைக்கும் அந்த மருந்து வயிற்றுப் புண்ணை ஆற்றிவிடுமென அதனைக் குடித்து விட்டு அருகிலிருந்தவா்களிடம் கூறியுள்ளாா். பின்னா் மயங்கி விழுந்த அவா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இவருக்கு மனைவி, 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனா். புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.