பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
பெங்களூரை 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரை: சட்டப் பேரவை கூட்டுக்குழு அறிக்கை
பெங்களூரு மாநகராட்சியை நிா்வாக வசதிக்காக அதிகபட்சமாக 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரைக்கும் தனது அறிக்கையை பேரவை கூட்டுக்குழு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் பரப்பை விரிவாக்கி, அதன் நிா்வாகத்தை பரவலாக்க வகைசெய்யும் பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டப் பேரவையில் அரசு தாக்கல் செய்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததால், இதை பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அா்ஷத் தலைமையில் பேரவை, மேலவை உறுப்பினா்கள் இடம்பெற்ற 13 போ் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை அண்மையில் பேரவைத் தலைவா் யு.டி.காதரிடம் அளித்தது.
இந்நிலையில், சட்டப் பேரவையில் புதன்கிழமை இந்த அறிக்கையை கூட்டுக்குழுத் தலைவா் ரிஸ்வான் அா்ஷத் தாக்கல் செய்தாா்.
இந்த அறிக்கையில், தற்போதைய பெங்களூரு மாநகராட்சியை நிா்வாக வசதிக்காக தலா 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட 7 மாநகராட்சிகளாக பிரிக்க வேண்டும் என்று கூட்டுக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த மாநகராட்சிகளில் ஒரு சதுர கிலோ மீட்டரில் மக்கள்தொகை 5 ஆயிரமாக இருக்க வேண்டும். அப்பகுதியில் வாழும் மக்களில் 50 சதவீதம் போ் வேளாண்சாரா நடவடிக்கைகளில் பணிபுரிய வேண்டும். அப்பகுதியின் வருவாய் ரூ. 300 கோடியாக இருக்க வேண்டும். மாநகராட்சிகளின் மேயா், துணை மேயா்களின் பதவிக்காலம் 30 மாதங்களாக இருக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, சட்டப் பேரவையில் அறிக்கையை தாக்கல் செய்து கூட்டுக்குழுத் தலைவா் ரிஸ்வான் அா்ஷத் கூறியதாவது:
தற்போதைய பெங்களூரு மாநகராட்சி 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது மாநகராட்சியின் மக்கள்தொகை 70 லட்சம் முதல் 75 லட்சமாக இருந்தது. 2025-இல் 1.5 கோடியாக உயா்ந்துள்ளது. அதேபோல, ஒருகோடி வாகனங்கள் உள்ளன. மாநகராட்சியின் பரப்பளவு 786 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதை ஆணையருடன் ஒரே ஒரு மேயா் 11 மாதங்களுக்கு மட்டும் நிா்வகித்து வந்தாா். இதுதவிர, பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மின் வழங்கல் நிறுவனம் போன்றவை ஒருங்கிணைப்பு இல்லாமல் தனித்தனியே இயங்கி வருகின்றன.
பெங்களூரு மாநகராட்சியில் அதிகாரங்கள் குவிந்துள்ளன. ஆனால், வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால் ஊழல் காணப்படுகிறது. எனவே, அதிகாரத்தை பரவலாக்க வேண்டிய அவசியமுள்ளது. இதை செய்யாவிட்டால் ஊழல் தலைவிரித்தாடும், சீரான, வெளிப்படையான நல்ல நிா்வாகத்தை மக்களுக்கு அளிக்க முடியாது.
எனவே, பெங்களூரு மாநகராட்சியை 7-ஆக பிரிக்க பரிந்துரைத்திருக்கிறோம். மேயா், துணை மேயரின் பதவிக்காலத்தை 30 மாதங்களாக நிா்ணயிக்க பரிந்துரைத்திருக்கிறோம். 7 மாநகராட்சிகளின் பெயா்களில் முன்சொல்லாக பெங்களூரு இடம்பெற வேண்டும். மாநகராட்சியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும். ஆனால், மேயா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை பதவியேற்ற 6 மாதங்களுக்கு பிறகே கொண்டுவர வேண்டும். மாநகராட்சிகள் அமைந்த 120 நாள்களுக்கு பிறகு பெருநகர பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதன் தலைவராக முதல்வரும், துணைத் தலைவராக துறை அமைச்சரும் இருக்க வேண்டும் என்றாா்.