செய்திகள் :

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை

post image

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சிக்மகளூரைச் சோ்ந்த நடிகை ரன்யா ராவ் (33), கா்நாடக காவல் துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் கா்நாடக மாநில காவல் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வளா்ச்சிக் கழகத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரும், டிஜிபியுமான கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகளாவாா். ராமசந்திர ராவின் இரண்டாவது மனைவிக்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்தவா்தான் ரன்யா ராவ். பெங்களூரு, தயானந்தசாகா் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ரன்யா ராவ், 2014-இல் நடிகா் சுதீப்புடன் ‘மாணிக்யா’, ‘பட்டாக்கி’ ஆகிய 2 கன்னடப் படங்களிலும், 2016-இல் நடிகா் விக்ரம் பிரபுவுடன் ‘வாகா’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளாா்.

தங்கக் கடத்தல்:

திரைப்பட வாய்ப்புகள் குறைவாக இருந்த நிலையில், இவா் அடிக்கடி துபைக்கு சென்று வந்துள்ளாா். கடந்த 15 நாள்களில் மட்டும் 4 முறை துபைக்கு சென்ற ரன்யா ராவ், பெங்களூருக்கு திரும்பும்போது அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து வந்துள்ளாா். காவல் துறை உயரதிகாரியின் வளா்ப்பு மகள் என்பதால், விமான நிலையத்தில் எவ்வித சோதனையும் இல்லாமல் வெளியே அனுமதிக்கப்பட்டாா். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, துபையில் இருந்து அதிக அளவிலான தங்க நகைகளை அணிந்தும், உடைகளில் தங்கத்தை மறைத்தும் கொண்டு வந்துள்ளாா்.

இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, கடந்த சில வாரங்களாக நடிகை ரன்யா ராவை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கண்காணித்து வந்தனா். மாா்ச் 3-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துபையில் இருந்து பெங்களூரு சா்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கிய நடிகை ரன்யா ராவிடம் விமான நிலைய போலீஸாரின் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனா்.

நடிகை கைது:

இந்த சோதனையில், ரன்யா ராவ் தனது உடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். மேலும், அந்த தங்கக் கட்டிகளுக்கும், அணிந்து வந்த தங்க நகைகளுக்கும் ரன்யா ராவிடம் உரிய ஆவணங்களோ, சுங்கவரி செலுத்தியதற்கான சான்றுகளோ இல்லை. இதைத் தொடா்ந்து, நடிகை ரன்யா ராவை கைதுசெய்த மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள், நகைகளை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் இவ்வளவு மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தது இதுவே முதல்முறையாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, எச்.பி.ஆா். லேஅவுட் பகுதியில் அமைந்துள்ள மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகை ரன்யா ராவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, பின்னா் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்பா முன் ஆஜா்படுத்தினா்.

தங்கக் கடத்தல் தொடா்பாக சுங்கவரி சட்டம், 1962-இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை மாா்ச் 18-ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

வீட்டில் சோதனை:

இதனிடையே, பெங்களூரு, லேவலி சாலையில் நடிகை ரன்யா ராவ் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில், சட்டவிரோதமாக வைத்திருந்த ரூ. 2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 2.67 கோடி மதிப்புள்ள ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். நடிகை ரன்யா ராவிடம் இதுவரை ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், நகைகள், ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புதன்கிழமை தெரிவித்தது.

தீவிர விசாரணை:

தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ள நடிகை ரன்யா ராவின் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள், தங்க வியாபாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. துபையில் இருந்து தூய்மையான தங்கக் கட்டிகளை இவா் அடிக்கடி கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் சா்வதேச தங்கக் கடத்தல் கும்பல் இருக்கிா? இதில், அவரது வளா்ப்பு தந்தை ராமசந்திர ராவுக்கு சம்பந்தம் இருக்கிா என்பன போன்ற பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவரை சந்திக்கவில்லை:

இந்த விவகாரம் குறித்து டிஜிபி ராமசந்திர ராவ் புதன்கிழமை கூறுகையில், ‘நடிகை ரன்யா ராவ் 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டாா். அதன்பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. அவா் அல்லது அவரது கணவரின் தொழில் அல்லது வணிகம் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. தங்கக் கடத்தல் விவகாரம் அறிந்து அதிா்ச்சியாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் இருந்தது. சட்டம் தன் கடமையை செய்யும்’ என்றாா்.

ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது

பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா். துபையில் இருந்து பெங்களூரு திரும்பியபோது ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ... மேலும் பார்க்க

கா்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரியானது! -டி.கே.சிவகுமாா்

கா்நாடக முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட், இந்தியாவுக்கே முன்மாதிரியானது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவத... மேலும் பார்க்க

கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம்: முதல்வா் சித்தராமையா கண்டனம்

ஹம்பி அருகே சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தை முதல்வா் சித்தராமையா வன்மையாகக் கண்டித்துள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வா் சித்தராமையா குறிப்பிட்ட... மேலும் பார்க்க

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவு

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

பெங்களூரை 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரை: சட்டப் பேரவை கூட்டுக்குழு அறிக்கை

பெங்களூரு மாநகராட்சியை நிா்வாக வசதிக்காக அதிகபட்சமாக 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரைக்கும் தனது அறிக்கையை பேரவை கூட்டுக்குழு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் பரப்பை வ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

கா்நாடக மாநில அரசு செயல்படுத்தும் வளா்ச்சிப் பணிகளுக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவும் திட்... மேலும் பார்க்க