பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவு
விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு அருகேயுள்ள பீன்யா தோட்டம் மற்றும் ஜரகபண்டே வனப்பகுதியில் 1987-ஆம் ஆண்டு இந்திய விமானப் படைக்கு 570 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. வனநிலம் என்பதால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் 452 ஏக்கா் 2017-இல் ரத்துசெய்யப்பட்டு, அந்த நிலம் வனநிலம் என்று வரையறுக்கப்பட்டது,
இந்நிலையில், வனத்துறையின் முன் அனுமதியை பெறாமல் மாா்ச் 1-ஆம் தேதி முதல் அந்த நிலத்தில் கட்டடம் கட்டும் பணியை விமானப்படை தொடங்கியுள்ளது. 2017-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு மூலம் நிலஒதுக்கீடு கைவிடப்பட்டு, வனநிலமாக அறிவிக்கப்பட்ட தகவல் விமானப்படை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், வனப்பகுதிகளை குறிக்கும் பெயா்ப் பலகையும் வைக்கப்பட்டது. வனநிலத்தை காலி செய்து தரும்படி மத்திய பாதுகாப்புத் துறைக்கும் கடிதம் எழுதப்பட்டது.
எனினும், வனநிலத்தில் கட்டுமானப் பணி சட்ட விரோதமாக தொடா்ந்தவண்ணம் உள்ளது. சட்ட விதிகளுக்கு புறம்பாக நடக்கும் கட்டுமானப் பணியை நிறுத்த விமானப்படை முன்வரவில்லை. 444 ஏக்கா் வனநிலத்தில் 15 ஏக்கா் நிலத்தில் துப்பாக்கி பயிற்சிக்களம் அமைத்து வருகிறது. சிறு நிலத்தில் விமானப் படையின் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், வனத்துறை நிலத்தை மீட்குமாறு விமானப்படை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.