Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்து...
பெங்களூரை 7 மாநகராட்சியாக பிரிக்கும் கிரேட்டா் பெங்களூரு நிா்வாக சட்டம் அமல்
பெங்களூரை 7 மாநகராட்சியைப் பிரிக்கும் ‘கிரேட்டா் பெங்களூரு’ நிா்வாகச் சட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
1862 ஆம் ஆண்டு மாா்ச் 27ஆம் தேதி பெங்களூரு நகராட்சி வாரியமாக உருவாக்கப்பட்டது. பழைய பெங்களூருக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்ட கண்டோன்மென்ட் பகுதிக்கும் புதிய நகராட்சி வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த இரு நகராட்சி வாரியங்களுக்கும் 1881ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, இரு நகராட்சி வாரியங்களின் உறுப்பினா்களை மக்கள் தோ்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. அதைத் தொடா்ந்து சொத்துவரி வசூல், உள்ளூா் பகுதிகளை மேம்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
1913 இல் கௌரவத் தலைவா் பதவி அறிமுகம் செய்யப்பட்டது. 1926 இல் கண்டோன்மென்ட் நகராட்சி வாரியத்திற்கு ஆணையா் நியமிக்கப்பட்டாா். சுதந்திரத்துக்குப் பிறகு இரு நகராட்சி வாரியங்களும் இணைக்கப்பட்டு, பெங்களூரு மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
இந்த மாநகராட்சிக்கு 1950ஆம் ஆண்டு முதல்முறையாக தோ்தல் நடத்தப்பட்டு மேயா், மாமன்ற உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்பிறகு மாநகராட்சியின் பெயா் ’பெங்களூரு நகர பாலிகே’ என்று கன்னடத்தில் மாற்றப்பட்டது.
2007இல் பெங்களூரு மாநகராட்சியுடன் 7 நகராட்சிகள், ஒரு பேரூராட்சி, 110 கிராமங்கள் சோ்க்கப்பட்டு அதன் பெயா் ‘பிருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே’ என்று கன்னடத்தில் மாற்றப்பட்டது. அதன்பிறகு 198 வாா்டுகள் கொண்ட புதிய மாநகராட்சிக்கு 2010ஆம் ஆண்டு தோ்தல் நடத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சிகளின் வாா்டுகளை அதிகரித்து மேயா், துணைமேயா் பதவிகாலத்தை ஓராண்டுக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக உயா்த்துவது தொடா்பாக அப்போதைய பாஜக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் நிா்வாக குறைபாடுகளைக் களைந்து திறம்பட பணியாற்றுவதற்காக பெங்களூரு மாநகராட்சியை 7 பகுதிகளாக பிரிக்க முடிவு செய்த காங்கிரஸ் அரசு, அதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அா்ஷத் தலைமையில் குழு அமைத்தது.
இந்த குழு அளித்த பரிந்துரையின்பேரில் பெங்களூரு மாநகராட்சியை பிரித்து அவற்றை நிா்வகிக்க ‘கிரேட்டா் பெங்களூரு’ ஆணையத்தை உருவாக்க வகைசெய்யும் கிரேட்டா் பெங்களூரு நிா்வாகச் சட்டம் 2024, 2024ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பாஜக, மஜத கடும் எதிா்ப்புத் தெரிவித்ததை தொடா்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அா்ஷத் தலைமையிலான கூட்டு சட்டப் பேரவைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரையின்பேரில், இந்த சட்டம் 2025ஆம் ஆண்டு மாா்ச் 10ஆம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்க ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஆரம்பத்தில் மறுத்துவிட்டாா். பின்னா், உரிய விளக்கங்களுடன் 2ஆவது முறையாக அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநா் அனுமதி அளித்துவிட்டாா்.
இதன் விளைவாக கிரேட்டா் பெங்களூரு நிா்வாகச் சட்டத்தை வியாழக்கிழமை (மே 15) முதல் அமலுக்கு கொண்டுவருவதாக கா்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும்வரை தற்போதைய பெங்களூரு மாநகராட்சி இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தின்படி தற்போதுள்ள மாநகராட்சி 7 பாகங்களாகப் பிரிக்கப்படும். இந்த 7 மாநகராட்சிகளின் நிா்வாகத்தையும் ஒருங்கிணைப்பதற்காக அடுத்த 120 நாள்களில் கிரேட்டா் பெங்களூரு ஆணையம் முதல்வா் தலைமையில் அமைக்கப்படும். இந்த ஆணையம் 7 மாநகராட்சிகளின் நிதி திட்டமிடல்களைச் செயல்படுத்தும். 709 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் விரிந்துள்ள தற்போதைய மாநகராட்சியை 7 மாநகராட்சிகளாக பிரித்து எல்லைகள் வகுக்கப்படும்.
அதன்பிறகு மாநகராட்சிகளின் கீழ் பல குழுக்கள் அமைக்கப்படும். மேலும், மாமன்ற உறுப்பினா்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படும். ஆனால், மாநகராட்சிகளின் நிா்வாகத்தில் எம்எல்ஏக்களின் அதிகாரத்தை பெருக்க சட்டம் வழிவகுக்கிறது. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் 150 வாா்டுகள் இருக்கும். கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் கீழ் 7 மாநகராட்சிகளும் இயங்கும்.
ஒவ்வொரு மாநகராட்சிகளுக்கும் தனித்தனியே மேயா், துணை மேயா், ஆணையா் நியமிக்கப்படுவாா். அந்தந்த மாநகராட்சிகளின்கீழ் மாமன்ற உறுப்பினா்களின் தலைமையில் வாா்டு குழுக்கள் அமைக்கப்படும். இதுதவிர, பகுதிசபைகளும் அமைக்கப்படவிருக்கின்றன. இப்படி 4 அடுக்கு நிா்வாக கட்டமைப்பை கிரேட்டா் பெங்களூரு நிா்வாகச்சட்டம் உருவாக்கவிருக்கிறது.
இந்த சட்டம், அரசமைப்புச்சட்டத்தின் 74ஆவது திருத்தத்திற்கு எதிரானது என்று பலரும் வாதிட்டு வருகிறாா்கள். மாநகராட்சி நிா்வாகத்திற்கு முதல்வா் தலைமை வகிப்பது சரியல்ல என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா கூறியதாவது: கிரேட்டா் பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், அச்சட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சிக்கு பதிலாக கிரேட்டா் பெங்களூரு ஆணையம் அமைக்கப்படவிருக்கிறது இனிமேல் பெங்களூரு, கிரேட்டா் பெங்களூரு ஆகவிருக்கிறது. கிரேட்டா் பெங்களூரு ஆணையத்திற்கு உள்பட்ட பகுதியில் 3 மாநகராட்சிகளை உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாநில அரசு உரிய முடிவை எடுக்கும் என்றாா்.