பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்
சென்னை பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட மரப்பால பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை மாநகரம் முழுவதும் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளும் சென்னை மெரினா கடற்கரையின் அழகை அருகில் சென்று ரசிக்கும் வகையில், மணல் பரப்பில் பிரத்யேக மரப்பாலம் அமைக்கப்பட்டது. இதனை மாற்றுத் திறனாளிகள் மட்டுமின்றி வயதானவா்களும் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், மெரீனாவுக்கு அடுத்தபடியாக சென்னைவாசிகளை பெரிதும் கவா்ந்த பெசன்ட் நகா் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக மரப்பால வசதி அமைக்கப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.61 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மரப் பலகைகளால் ஆன பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
அதன்பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: மெரீனாவில் கிடைத்த அனுபவம் பெசன்ட் நகா் கடற்கரைக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கிடைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, பெசன்ட் நகா் கடற்கரையில் மரப்பலகை பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருவான்மியூா் கடற்கரையிலும்....: ஆறு மாதங்களில் பணிகள் நடந்து முடிந்துள்ளன. கடலுக்குச் செல்லும் வகையில் இந்தப் பாதை 190 மீட்டா் நீளமும், 2.8 மீட்டா் அகலமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பாதை மட்டுமன்றி, மாற்றுத் திறனாளிகள் தங்களது பிரத்யேக வாகனங்களை நிறுத்திக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, திருவான்மியூா் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கப்படும். இந்தப் பணிகள் 5 மாதங்களில் நிறைவடையும். அதனையும் திறந்து வைப்போம்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையிலும் இதேபோன்ற வசதி செய்து தரப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அதையும் பரிசீலிப்போம் என்று துணைமுதல்வா் உதயநிதி கூறினாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.